பிரான்ஸ் நாட்டின் பரிஸ் லாச்சப்பல் இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தினுடைய ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் தாயகத்திலுள்ள உறவுகளுக்கான அத்தியாவசிய தேவைகளையும், நீடித்து நிலைக்கக்கூடிய விடயங்களையும் கருத்திற்கொண்டு பல்வேறு உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடுத்தகட்டமாக யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் முதன்மைத் தேவையுடைய நோயாளர்களின் சிகிச்சைக்கு மிகவும் அத்தியாவசியமாக கருதப்பட்ட ஒரு கோடி ரூபா பெறுமதியான மின் அதிர்வு சிகிச்சை இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் சார்பில் தலைவர் இராசையா சிறீதரன் உபதலைவர் வின்சென்ட் அனக்கிளிற் மற்றும் சில உறுப்பினர்களது நேரடி களவிஜயத்தின் ஊடாக இவ்விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் தேசத்தில் குறிப்பாக தமிழர்களது வர்த்தக கேந்திர நிலையமாக விளங்கும் பரிஸ் லாச்சப்பல் தழிழ் வர்த்தகர்கள் பலரது நிதிப்பங்களிப்பின் ஊடாக தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இத்திட்டம் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டது.
குறிப்பாக தமது தெல்லிப்பளை பிராந்திய வைத்தியசாலைக்கு நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு நிலைமையை ஆய்வுசெய்து திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல் நிதி வளங்குனர் எனும் பெருமை பரிஸ் லாச்சப்பல் தமிழ் வர்த்தக சங்கத்தினரையே சாரும் என வைத்தியசாலையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எம்.எம்.ரெமன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்; வைத்தியர் திரு எம்.எம்.ரெமன்ஸ், உளநல வைத்திய நிபுணர் பேராசிரியர் வைத்தியர் எஸ்.சிவயோகன், வர்த்தக சங்கத் தலைவர் இராசையா சிறீதரன் உபதலைவர் வின்சென்ட் அனக்கிளிற் மற்றும் சில உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.